பயிர்களை நாம் விதைக்கிறோம், களைகளை இயற்கையே விதைத்துக் கொள்கிறது. உண்மையில் களைகள் அந்த இடத்துக்கே சொந்தமானது என்பதால் சாதகமான சூழ்நிலையில் அவை அதிகமாக வளர்ந்து விடுகிறது. பயிர்களுடன் களைகள் வளரும் போது அவை தண்ணீர், ஊட்டம் மற்றும் வளரிடம் போன்றவற்றுக்காக போட்டியிட்டு சாதகமான காலத்தில் சத்துக்கள் அனைத்தையும் களைகளே எடுத்துக் கொண்டு நன்றாக வளர்ந்து விடுகின்றன. ரசாயன விவசாயிகள் களைக்கொல்லிகளை பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் போது உணவு நஞ்சாவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. இயற்கை விவசாய முறையில் களைகளை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகள் உள்ளன.
பயிர்களின் வளர்ச்சி நிலையில் சில முக்கிய நிலைகளில் களைகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த நேரத்தில் களைகள் இருந்தால் மகசூல் பாதிக்கப்படும். பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் களைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. களைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனில் தொடர்ந்து பயிர்களை கவனித்து அதில் எப்படிப்பட்ட களைகள் தொடர்ந்து வளர்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.
*பயிருக்கான இடைவெளி:* சாகுபடி செய்யும் போது பயிர்களின் வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளி சரியான அளவு இருக்கவேண்டும். உதாரணமாக மரவள்ளி சாகுபடி செய்யும் போது இடைவெளி ஒரு மீட்டர் இருக்கும் போது மூன்று மாதங்களில் பயிர் நன்கு வளர்ந்து இலைகளின் நிழல் இடைவெளிகளில் விழுவதால் களைகள் வளர்வது தானாகவே கட்டுப்படுத்தப்படுகிறது. ஒவ்வோரு பயிருக்குமான சரியான இடைவெளியை கொடுத்தால் போதுமானது. கரும்பில் ஆரம்பத்தில் களைகளை சரியாக கட்டுப்படுத்திவிட்டால் பயிர் வளரவளர களைகள் முழுவதும் கட்டுப்பட்டுவிடும்.
*களைகளை அழிக்கும் காலம்:* உழவு செய்யும் போதே களைகளை ஓரளவு கட்டுப்படுத்தலாம். கைக்களை எடுக்கும்போது வேரோடு களைகளை பிடுங்கி விடுவது நல்லது. கோரை, அருகு போன்றவற்றை அடியோடு எடுக்க முடியாது, இப்படிப்பட்ட கடினமாக களைகளின் விதைகள் மண்ணில் விழாமல் கவனித்துக் கொள்ளவேண்டும். களைகளில் விதைகள் காற்றின் மூலமாகவும், கடந்த பருவத்தில் இருந்து களைகளிள் மூலமாகவும் பரவுகிறது. எனவே களைகள் பூத்து விதை விடுவதற்கு முன்பே அவற்றை களைந்து விடுவது அவசியம். மேலும் இயற்கை முறை சாகுபடி மூலமாக மண் எந்த அளவுக்கு மென்மையடைகிறதோ அந்த அளவுக்கு களைகள் வளர்வதும் படிப்படியாகக் குறையும்.
*பயிர் சுழற்சி:* பயிர் சுழற்சி மண் வளத்திற்கு எவ்வாறு உகந்ததோ அவ்வாறே களை கட்டுப்பாட்டிற்கும் உகந்ததாகும். ஒவ்வொரு பயிரும் ஒரு களையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்போடு இருக்கும். உதாரணமாக நெல் சாகுபடி செய்யும் வயலில் காணப்படும் குதிரை வாலிப் புல் நெல்லுடன் சமமாக வளரக்கூடியதாகும். நெல் அறுவடைக்கு முன்பே அது விதையை உதிர்க்கும். ஆனால் நெல்லுக்கு அடுத்து கடலை அல்லது வேறு ஒரு பயிரை சாகுபடி செய்யும் போது அதில் குதிரைவாலிப்புல் மீண்டும் முளைத்து வளர்வது தடை படுகிறது. இது ஒரு உதாரணமாகும். விவசாயிகள் அனுபவத்தின் மூலம் இவ்வாறு பல்வேறு களைச்செடிகள் கட்டுப்படுவதைப் பார்த்திருக்க முடியும்.
ஊடுபயிர்கள் மற்றும் உயிர் மூடாக்கு: களைக்கட்டுப்பாட்டில் இந்த வழிமுறை முக்கியப் பங்காற்றுகிறது. ஊடுபயிர்கள் மண்ணின் நன்றாக படர்ந்து வளர்ந்து தரையை முழுவதுமாக மூடிவிடுகிறது. தடைப்பயறு, நரிப்பயறு, சர்க்கரை வள்ளி போன்றவை இதற்கு உதாரணமாகும். மேலும் பல்வேறு வகையான தரைபடர் ஊடுபயிர்கள் உள்ளன. இவை களைகளின் மீது படர்ந்து சூரிய ஒளி களைகளின் மீது படுவதை தடைசெய்வதினால், களைகளின் ஒளிச்சேர்க்கை நின்று மடிந்து விடுகின்றன.
ஊடுபயிர்கள் சாகுபடி செய்யும் போது முக்கிய பயிர் அறுவடைக்கு வருவதற்கு முன்னரே ஊடுபயிர் அறுவடைக்கு வருவதாக இருக்கவேண்டும். உதாரணமாக வாழைக்கு நடுவே சோளம் விதைப்பது, தட்டைப்பயிர் விதைப்பது போன்றவை. மேலும் முக்கியப்பயிரும் ஊடுபயிரும் ஒரே வகையான பயிராக இருக்கக்கூடாது, உதாரணமாக மரவள்ளி சாகுபடி செய்யும் போது சர்க்கரை வள்ளியை ஊடுபயிராக செய்யக்கூடாது. ஒரே குடும்பத் தாவரங்களில் பூச்சித் தாக்குதல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்யக்கூடாது. உயிர் மூடாக்கு அல்லது ஊடுபயிர்கள் களையை மட்டும் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மண்ணின் வெப்பத்தைக் குறைக்கிறது, ஈரப்பதத்தைத் தக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
*மூடாக்கு:* இயற்கை விவசாயத்தில் மூடாக்கு என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும், களையைக் கட்டுப்படுத்துவதில் மூடாக்கு முக்கியப் பங்காற்றுகிறது. காய்ந்த இலைதலைகள், தட்டைகள், வைக்கோல்கள் போன்ற பண்ணைக் கழிவுகள் அனைத்தையும் மூடாக்காக பயன்படுத்தலாம். மூடாக்கு என்பது ஈரமாக இருக்கக்கூடாது, ஈரமாக உள்ள கழிவுகளை உலர்த்திய பின்பே மூடாக்காக பயன்படுத்த வேண்டும். மர அறுவைத் தூளையும் மூடாக்காக பயன்படுத்தலாம். மூடாக்கு ஊடுபயிர்கள் செய்யவேண்டிய பணியை செய்துவிடுகிறது. சூரிய ஒளியை தடைசெய்வதினால் மண்ணில் முளைக்கும் களைச்செடிகள் வளரமுடியாமல் மடிந்து விடுகிறது. மேலும் மூடாக்கு நுண்ணுயிர்கள் வளர்வதற்கு ஊடகமாகவும், மட்கிய பின்னர் மண்ணுக்கு உரமாகவும் மாறுகிறது. இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்துவதினால் கிளைப்போசேட் (ரௌண்ட்அப்) போன்ற கடும் நஞ்சுகளை விவசாயிகள் தவிர்க்கலாம். மூடாக்கு இடுவதினால் மண் வளமடையும், ஊடுபயிர்களினால் வருமானமும் கிடைக்கும்.
தொகுப்பு
*ஈஷா விவசாய இயக்கம்*
*தொடர்புக்கு: 8300093777*
Comments
Post a Comment